வியாழன், 30 மே, 2013

பெருமைமிகு தமிழினமே! பேரறிவு கொள்வாயோ!!!

                                                       தற்போது நாம் நிறுத்தல் அளவீடுகளுக்கும் நீள அளவீடுகளுக்கும் கால அளவீடுகளுக்கும் உலகளாவிய அளவுகளைப் பயன்படுத்துகிறோம். ஆனால் அவையெல்லாம் ஆங்கிலவழி அளவுகளாக உள்ளன. உலகந்தழுவிய பார்வைக்கு அவை தான் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதேவேளை நமது தமிழிலும் நமது முன்னோர்கள் தமிழ் அளவைகளைக் கொண்டு வரையறுத்துள்ளனர். 
                                                          இப்போது உலகம் கண்டறிந்த அளவைகளுக்கெல்லாம் மூத்ததாகவும் இவைகளைவிடவும் துல்லியமாகவும் தமிழ் அளவைகள் உள்ளன என்பதை அறியும் போது உள்ளம் மகிழ்ச்சியில் சிலிர்க்கிறது. படித்துப் பாருங்கள் செந்தமிழ்ச்சொந்தங்களே! வீடுகளில் நமது பாட்டனோ, பாட்டியோ சொல்லியது நினைவுக்கு வரலாம். உலகளாவிய அளவைகளைக் கற்றுக்கொள்ளுங்கள். நல்லது. அதேவேளை தமிழின் அளவைகளையும் தெரிந்துகொண்டு பயன்படுத்துங்கள். உங்களைச் சுற்றியுள்ளோரில் உங்களுக்கு மட்டும் இவையெல்லாம் தெரிந்திருப்பது சிறப்பு தானே!

நிறுத்தல் அளவுகள்:
***************************
4 நெல் எடை - 1 குன்றிமணி
2 குன்றிமணி - 1 மஞ்சாடி
2 மஞ்சாடி - 1 பணவெடை
5 பணவெடை - 1 கழஞ்சு
8 பணவெடை - 1 வராகனெடை
10 வராகனெடை - 1 பலம்
40 பலம் - 1 வீசை
6 வீசை - 1 தூலாம்
8 வீசை - 1 மணங்கு
20 மணங்கு - 1 பாரம்
            "குன்றிமணி", "வீசை" அளவைகளை இதற்குமுன் கேட்டதுபோல் இருக்குமே! "பாரம்" தாங்காமல் கீழே போட்டான் என்ற சொற்றொடரும் நினைவுக்கு வருகிறதா?

நீள அளவுகள்:
***************************
10 கோன் - 1 நுண்ணணு
10 நுண்ணணு - 1 அணு
8 அணு - 1 கதிர்த்துகள்
8 கதிர்த்துகள் - 1 துசும்பு
8 துசும்பு - 1 மயிர்நுணி
8 மயிர்நுணி - 1 நுண்மணல்
8 நுண்மணல் - 1 சிறுகடுகு
8 சிறுகடுகு - 1 எள்
8 எள் - 1 நெல்
8 நெல் - 1 விரல்
12 விரல் - 1 சாண்
2 சாண் - 1 முழம்
4 முழம் - 1 பாகம்
6000 பாகம் - 1 காதம்
4 காதம் - 1 யோசனை
      உலகின் மிக நுண்ணியது அணு என்று இப்போதுள்ள அறிஞர்கள் கண்டறிந்து வியந்தனர். இதை கேள்விபட்டு தமிழ்ச்சாதியும் வியந்தது. ஆனால் இதற்கு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழில் அதை பயன்படுத்திவந்துள்ளனர் என்பது எவ்வளவு பெருமை!? ஆனால் அதை எல்லாம் தமிழர்கள் புறந்தள்ளிவிட்டு மேற்கு உலகம் தற்போது கண்டறிந்த அளவைகளைக் கொண்டாடிவருவது வரலாற்றுப் பிழை அல்லவா?
                   காதமும் யோசனையுமே இலக்கியங்களில் பல இடங்களில் வருகின்றன. ஒரு காத  தூரம் என்பது 8 முதல் 16 கிலோமீட்டர் வரையான ஒரு நீளமாக இருக்கலாம் என கருதப்படுகிறது. (ஆறைங்காதம் நம்மகநாட்டும்பர் - சிலப்பதிகாரம்) யோசனை என்பது நான்கு காதம் அல்லது குரோசமாக இருக்கலாம் எனவும், ஏறத்தாழ 24-26 கிலோமீட்டர் நீளமாக இருக்கலாம் எனவும் கருதப்படுகிறது. (ஒரு நூற்று நாற்பது யோசனை – சிலப்பதிகாரம், நாலாயிரம் நவயோசனை நளிவண் திசை எவையும் (கம்பராமாயணம்)
                        மாதவி தனது நாட்டிய அரங்கேற்றத்தை நிகழ்த்திய மேடையை கட்டுவதுபற்றிய சிலப்பதிகாரப் பாடலில் விரல், சாண், கோல் போன்ற பல நீள அளவைப் பெயர்கள் வருகின்றன.

“கண்ணிடை ஒருசாண் வளர்ந்து கொண்டு
நூநெறி மரபின் அரங்கம் அளக்கும்
கோலளவிருபத்து நால்விரலாக
எழுகோலாகலத் தெண்கோல் நீளத்
தொருகோல்உயரத் துறுப்பினதாக்கி
உத்தரப் பலகையோ டரங்கின் பலகை
வைத்த இடைநிலம் நாற்கோலாக
ஏற்ற வாயில் இரண்டுடன் பொலிய
தொற்றிய அரங்கினில் தொழுதனரேத்த...”
‍   (அரங்கேற்றுக்காதை)
                நம்முன்னோர்கள் இப்படி  உலகின் மூத்த நாகரிக இனமாக வாழ்ந்ததை மறந்து அந்நியர்களின் அறிவை வியந்து வாழ்தல் தவறன்றோ தமிழினமே! காலத்தின் கொடுமையன்றோ! காலம் என்றதும் கால அளவைகளும் நினைவுக்கு வருகின்றது.

கால அளவுகள்:
***************************
2 கண்ணிமை = 1 நொடி
2 கைநொடி = 1 மாத்திரை
2 மாத்திரை = 1 குரு
2 குரு = 1 உயிர்
2 உயிர் = 1 சணிகம்
12 சணிகம் = 1 விநாடி
60 விநாடி = 1 நாழிகை
2 1/2 நாழிகை = 1 ஓரை
7/5 ஓரை = 1 நல்வேளை
2 நல்வேளை = 1 யாமம்
4 யாமம் = 1 பொழுது
2 பொழுது = 1 நாள்
15 நாள் = 1 பக்கம்
2 பக்கம் = 1 திங்கள்
6 திங்கள் = 1 அயனம்
2 அயனம் = 1 ஆண்டு
60 ஆண்டு = 1 வட்டம்
                 இப்படி தோண்ட, தோண்ட புதையல் கிடைத்துக்கொண்டே இருக்கும். புதையல் ஒத்த மொழியை ஒதுக்கிவிட்டு மேற்பூச்சு பூசிக்கொண்ட மொழிகளைக் கொண்டாடுவோரை என்ன சொல்லி திட்டுவது? மின்னுவதெல்லாம் பொன்னல்ல! தொன்மைவாய்ந்த தமிழ்மொழியில் பல ஆண்டுகளின் தூசு படிந்து கிடக்கிறது. அதை துப்புரவு செய்யவேண்டியது நமது ஒருவொருவரின் கட்டாயப் பணி.!!! புதியதைக் கற்பது அறிவென்றால், மறைந்துபோனதை மீட்டெடுத்து கற்பதும் கற்றுக்கொடுப்பதும் பேரறிவன்றோ!


                             பெருமைமிகு தமிழினமே! பேரறிவு கொள்வாயோ!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக