"எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்"
என்றார் பாட்டன் வள்ளுவர். ஆனால், பன்னெடுங்காலமாக
தமிழர்கள் ஒரு பாரிய வரலாற்றுப்பிழையைச் செய்துவருகின்றனர். வந்தவரையெல்லாம் வாழ
வைத்து பழகிய ஒரு பெருமைவாய்ந்த தமிழ்த்தேசிய இனம் தம் சொந்த மொழியின் எண்களைச்
சரியாக சொல்லிவந்ததா, வருகிறதா என்று
பார்த்தால் ஒரு பிழை என் நெஞ்சைப் பிளக்கின்றது.
என்ன பிழை என்றா
கேட்கின்றீர்கள்…? தமிழின் எண்களை
வரிசையாகச் சொல்லிப் பாருங்கள்!
ஒன்று, இரண்டு,மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு, எட்டு இதன்பின் ஒன்பது என்று தானே
சொல்லிவந்தீர்கள்...?
பத்தின் அடுக்காக
சொன்னால், எண்பதுக்கு பின் தானே ஒன்பது வரவேண்டும்..? ஏன் எட்டுக்குப் பின்பே வந்தது...? எண்களை வரிசைபடுத்தத் தெரியாத முட்டாள்களா
நீங்கள்...? இப்படித்தான்
காலங்காலமாகச் சொல்லப்பட்டுவருகிறது என்று சொல்லிவிட முடியாது...
"எதையும் ஆய்வுக்கு
உட்படுத்து" என்ற அறிவின் கோட்பாட்டைச் செயல்படுத்தாமல் விட்டது ஏன்...? காலங்காலமாகச் சொல்லப்பட்டுவருகிறது என்பது
உண்மை தான். ஆனால் இது வரலாற்றுப்பிழை என்பதை நாம் அறியவேண்டும்.
தமிழ்த்தேசிய இனம் பல
அந்நியர்களின் படையெடுப்பிற்கும் ஆக்கிரமிப்பிற்கும் ஆளாக்கப்பட்டு மொழி, கலை, கலாச்சாரம், பண்பாடு, பாரம்பரியம், பொருளியல், வரலாறு என்று
அத்தனையும் பாழாக்கப்பட்டு சீரழிக்கப்பட்டது என்பது தான் உண்மை.
முதல் கோணல் முற்றும்
கோணல் என்பது போல, எட்டு என்ற எண்ணிற்கு
பின்புள்ள எண்ணை மாற்றியதால் எண்பதுக்குப் பின் தொண்ணூறும், எண்ணூறுக்குப் பின் தொள்ளாயிரமும், எட்டாயிரத்துக்குப் பின் ஒன்பதாயிரமும்
மாறிவிட்டன.
ஒரு சிறு குழந்தைக்கு எண்களைச்
சொல்லிக்கொடுக்கும்போது அந்த குழந்தை ஐயத்தோடு கேட்கும். எண்பதுக்கு பிறகு ஒன்பது
தானே? என்று. நாம் உடனே அதெல்லாம் தவறு எண்பதுக்கு
பிறகு தொண்ணூறு தான் என்று சொல்லிக்கொடுப்போம். ஆனால் அது சரியா? இல்லையே! உங்களுக்கு ஒரு ஐயப்பாடு எழலாம்.
அப்படியென்றால் எட்டுக்குப் பின் என்ன எண் வரும் என்று. எட்டுக்குப் பின் வந்த
எண்="தொண்டு". இதுபற்றி நான் ஆதாரமின்றிச் சொல்லவில்லை.
எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான பரிபாடலில்
வருகின்ற வரிகள் இந்த உண்மையை நமக்கு பறைசாற்றும்.
"இருநிழல் படாமை மூவே ழுலகமும்
ஒருநிழ லாக்கிய ஏமத்தை மாதோ
பாழெனக் காலெனப் பாகென ஒன்றென
இரண்டென மூன்றென நான்கென ஐந்தென
ஆறென ஏழென எட்டெனத் தொண்டென..."
என்று பரிபாடலில்
திருமாலை வாழ்த்திப் பாடுகின்ற வரிகளில் கடைசி சொல்லைக் கவனித்தால் நீங்கள்
உண்மையை விளங்கிக்கொள்வீர்கள். தமிழரின் வரலாற்றில் பிழை செய்த கூட்டம் இந்த
எண்ணையும் விட்டுவைக்கவில்லை.
ஒன்பது என்று சொல்வது கூட
தவறான ஒன்று. அது உண்மையில் "தொன்பது". இதன் வரிசை தொண்டு, தொண்பது,தொண்ணூறு,தொண்டாயிரம், தொண்பதாயிரம்
என்று இருந்திருக்கக் கூடும். காலப்போக்கில் மருவி தமது உண்மையான பெயரை இழந்து
பேச்சுவழக்கே எழுத்துவழக்கிலும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த பிழையைத்தான்
எல்லா ஆசிரியர்களும் மாணவர்களுக்கு சொல்லித்தருகின்றனர். பாவம்! அவர்களுக்கே
இப்படித்தானே பிழையோடு சொல்லிக்கொடுக்கப்பட்டிருக்கும்.
அன்பு தமிழ் உறவுகளே! படித்தறிந்த சான்றோர்களே!
அறிவிற்சிறந்த ஆன்றோர்களே! தமிழில் எத்தனையோ கல்வியாளர்கள் முனைவர் பட்டம்
பெற்றிருக்கிறீர்களே...?!?! ஒருவர்கூடவா இந்த
பிழையைக் கண்டுகொள்ளவில்லை..? ஆசிரியப்
பெருமக்களின் பணியே இதுதானே...??? தமிழ் உங்களுக்கு
பிழைப்புதானே தவிர தமிழில் பிழை இருந்தால் எந்த கவலையும் இல்லை. அப்படித்தானே...???
"ஆசிரியர்
என்பதற்கு என்ன பொருள்?" என்று நான் ஒரு
ஆசிரியரிடம் கேட்டேன். அவர் உடனே பதில் சொன்னார் "சொல்லிக்கொடுப்பவர்"
என்று. இத்தனைக்கும் அவர் தமிழ் ஆசிரியர். தமது பணிப்பெயரின் பெயர்க்காரணமே
தெரியாமல் இத்துணைக் காலம் இவர் பணிபுரிந்தாரே என்று எனக்கு உள்ளுக்குள் அரித்தது.
நான் அவரிடம் "நீங்கள் சொன்னது தவறு அய்யா! தவறு என்பதை விட உங்களுக்கு
சரியாகச் சொல்லத்தெரியவில்லை" என்றேன். அவர் விளக்கம் கேட்டார். ஆசிரியர்
என்பதை இரண்டாகப் பிரிக்கலாம்.ஆசு + இரியர் = ஆசிரியர். அதாவது மாணாக்கரின்
மனத்திலுள்ள அறியாமையாகிய குற்றத்தைப் போக்குபவர் எனப் பொருளாகும். ஆசான் = ஆசு
+ ஆன். அதாவது மாணாக்கர்க்கு (கற்பதற்கு)ப் பற்றுக்கோடு போன்றவன். இப்படி
சொன்னதும் அவர் உண்மையில் வியந்து தான் என்னைப் பார்த்தார். என்னிடம் அவர், "தம்பி! நீங்கள் தமிழில் என்ன பட்டம்
வாங்கியுள்ளீர்கள்?" என்று கேட்டார்.
நான் சிரித்துக்கொண்டே, "அய்யா! நான்
தமிழன். தமிழ்வழிக்கல்வியில் படித்தவன் தான். ஆனால் பட்டம் பெறவில்லை. நான்
ஆங்கிலவழியில் தகவல் தொழில்நுட்பம் பயின்றேன்" என்றேன்.
இப்படித்தான் உறவுகளே, ஆசிரியப்பெருமக்களும் அறியாமையிலேயே உள்ளனர்.
இதையெல்லாம் களையவேண்டிய பெருங்கடமை தமிழ்ப்பிள்ளைகளாகிய நம்மிடம்தான்
கையளிக்கப்பட்டிருக்கிறது.
பாடத்திட்டத்தில் மாற்றம்
கொண்டுவராமல் இளைய பிள்ளைகளிடையே இதை கொண்டு சேர்க்க முடியாது. ஆனால் இப்போதுள்ள
அரசுகளோ இதை ஒருபோதும் இசையாது. ஏன்..?? தமிழின்மீது, தமிழரின்மீது அக்கறை இல்லாது அரசுகள் எப்படி
இந்த மாற்றங்களைக் கொண்டுவரும்...???
நாம் தான் மாற்ற
வேண்டும்! எப்படி? முதலில் நாம் மாற
வேண்டும். எட்டுக்கு பிறகு ஒன்பது என்றே சொல்லிப் பழகிப்போனதா? பள்ளியில் படிக்கத்தொடங்கிய காலந்தொட்டு
இப்படியே சொல்லிச் சொல்லிப் பழகிப்போனதா...???
"நாக்கையே திருத்த
முடியாத நீங்கள் எப்படி நாட்டைத் திருத்தப்போகிறீர்கள்...?" எலும்பில்லாத நாக்கே உங்களின் பேச்சைக்
கேட்காதென்றால் இந்த மக்கள் எப்படி கேட்பார்கள்...??? சிந்தியுங்கள்
உறவுகளே! இது பன்னெடுங்காலமாக இந்த இனம் செய்துவந்த, செய்துவருகின்ற
ஒரு பிழை. இதை தான் நீங்களும் உங்கள் பிள்ளைகளுக்கு பிழையோடே
சொல்லித்தரப்போகிறீர்களா...???
"எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு" என்ற வள்ளுவனின் வரிகளில் சொல்லப்படுகின்ற
இரண்டு கண்களில் ஒன்றான எண்ணை நாம் இதுவரை பிழையோடுதான் பயன்படுத்தி வந்துள்ளோம்.
படித்த தலைமுறைகளான நாம் தான் இனி இந்த பிழையெல்லாம் களையவேண்டும்.
பாடத்திட்டத்தில் மாற்றம் வர போரட்டம் செய்யலாம். படிக்கும் பிள்ளைகளிடையே மாற்றம்
வர கருத்துப்பரப்புரையே தேவையானது. இதுவும் ஒரு புரட்சிதான்! ஆம். கருத்தியல்
புரட்சி!!!
புரட்சி
செய்வோம்! புத்துலகு நெய்வோம்!!!
தமிழ் எமது உயிருக்கு நேர்...
உதயகுமார் தமிழன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக