தமிழா! நீ பேசுவது தமிழா? நீ எழுதுவது தமிழா? உனது மொழியின்
வரலாறு தெரியுமா? ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு மூத்த, நீண்ட, நெடிய
தொன்மைவாய்ந்த, வரலாற்றுப் பெருமைமிக்க, வீரஞ்செறிந்த
தமிழ்த்தேசிய இனத்தின் தாய்மொழி உன்னுடையது! ஆனால் நீ அதை பேசுகிறாயா? வேற்றுமொழிச்சொற்கள்
கலந்து தானே உன்னால் பேசவேமுடிகிறது? இது உனக்கு
இழுக்காகத் தெரியவில்லையா?
ஒரு இனம் தமது தாய்மொழியில்கூட சுத்தமாக பேசத்
தெரியவில்லையெனில் வெட்கப்படவேண்டிய அவமானம் இல்லையா? ஆங்கிலம் கலந்து
தான் தாய்மொழியைப் பேசுகிறான்! அய்யா காசி ஆனந்தன் அவர்கள் தமது பாடல் வரிகளில்
குறிப்பிடுவார்.
"அணில்
பிள்ளை கிளி மொழி பேசவே பேசாது!
ஆங்கிலத்தை நீயோ
சுமக்கிறாய் கூசாது!".
கரைந்தால் தான்
அது காகம்! கூவினால் தான் அது குயில்! சீறினால் தான் அது சிங்கம்! உறுமினால் தான்
அது புலி! தமிழ் பேசினால் தான் அவன் தமிழன்! தமிழோடு ஆங்கிலம் கலந்து பேசினால்
அவன் பெயர் என்ன? "தமிங்கிலன்" தானே? சொல் இப்போது நீ
தமிழனா? தமிங்கிலனா? சரி! இதுவரை நீ
எப்படியோ, இனிமேல் எவனாக இருக்கப்போகிறாய்? தமிழ் பேசி
தமிழனாகவா? பிறமொழி கலந்து ஒரு இனத்திற்குள்ளும் இல்லாத ஒரு
கலப்பினமாகவா?
உணவுப்
பழக்கத்தில் அந்நியரின் உணவுமுறைகளைப் பின்பற்றும் நீங்கள், உடைப்
பழக்கத்தில் மேற்கத்திய உடை நாகரிகத்தைப் பின்பற்றும் நீங்கள், ஏன் மொழிப்பற்றை
மட்டும் அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ளவே இல்லை? ஐரோப்பிய
ஒன்றியத்தில் உள்ள நாடுகளில் உள்ளோர் தத்தம் தாய்மொழிமீது பற்றோடு இருக்கின்றனர்.
இங்கிலாந்தின் தாய்மொழி ஆங்கிலம், பிரான்சின்
தாய்மொழி பிரெஞ்சு. இரண்டுமொழிகளுக்கும் ஒரே எழுத்துருக்கள் தான். சொற்கள்தான்
வேறுபடும். ஆங்கிலத்தில் "THANKS", என்றால்
பிரெஞ்சுமொழியில் "MERCY" என்று வரும். ஆனாலும் பிரான்சில் ஆங்கிலத்தின் தாக்கத்தைத் தடுக்க பல
அரசியல் சட்டங்களை அந்நாட்டு அரசு இயற்றியுள்ளது. பிரான்சில் வணிக நிறுவனங்களில்
ஆங்கிலம் கலந்து பிரெஞ்சுமொழியை எழுதினால் தண்டம் கட்டவேண்டும். பொதுகூட்ட
பேச்சுகளிலும் தொலைகாட்சி உரையாடல்களிலும் பிரெஞ்சுமொழியில்தான் பேசவேண்டும். இதெல்லாம்
பிரெஞ்சுமொழியின் மீது பிரெஞ்சுக்காரர்கள் வைத்துள்ள அளவிலாத மொழிப்பற்றே ஆகும்.
ஒரு
பிரெஞ்சுக்காரரிடம் ஆங்கிலேயர் அல்லாமல் வேறு ஒருவர் "THANKS" என்று சொன்னால் அவர் கோபத்துடன் சொல்வார்
"ஒன்று உங்கள் தாய்மொழியில் சொல்லுங்கள்.அல்லது எமது தாய்மொழியில் "MERCY" என்று சொல்லுங்கள். இருவருக்கும் தொடர்பில்லாத
மொழியில் உங்கள் நன்றியை ஏன் சொல்கிறீர்கள்?". இதுதான்
ஐரோப்பியர்களின் தாய்மொழிப்பற்று. அவர்களிடம் இருந்து எல்லாவற்றையும் பின்பற்றும்
தமிழ்ச்சாதி, அவர்களின் தாய்மொழிப்பற்றைப் பின்பற்றாமல் அவர்களின்
தாய்மொழியையே பின்பற்றுவது தான் கொடுமையிலும் கொடுமை!
மொழிதான் இனத்தின் அடையாளமாக, ஆதாரமாக
இருக்கின்றது. மொழி அழிந்ததால் இனமும் அழிந்துபோனதற்கான சான்றுகள் உள்ளன. எத்தனையோ
இனங்கள் அழிந்ததற்கு மொழி அழிவே முதற்காரணம்! மொழி சிதைவு இன சிதைவுக்கு
வழிகோலும். இமயம் வரை பரவி வாழ்ந்த தமிழர் என்ற தேசிய இனம் ஒரு
சிறுநிலப்பரப்பிற்குள் சுருங்கிப்போனது ஏன் என்று தெரியுமா? தமிழோடு
சமக்கிருதமும் பாலி மொழியும் கலந்து பல்வேறு மொழிகளாக சிதைந்து போயின.
தென்மொழிகளான தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற
மொழிகளிலிருந்து சமக்கிருதச் சொற்களை நீக்கினால் தூயத் தமிழ்ச்சொற்கள் தான்
மிஞ்சும். மொழிக்கலப்புத்திருமணங்கள் நடந்ததால் இருமொழிச்சொற்களும் கலந்து
பேசப்பட்டு கலப்புமொழிகள் உருவாயின. இதை வளர்ச்சி என்று கருத இயலாது. ஒரு மொழிபேசும்
தேசிய இனத்தின் மக்கள்தொகை குறைந்து தேசிய இனத்தின் அடர்த்தியும் காலப்போக்கில்
குறைந்துபோகும். இந்த அழிவைத் தடுக்க மொழியை அழியாமல் காப்பது நம் வரலாற்றுக்
கடமை! முதலில் தமிழன் தமிழில் பேசுகிறானா? இல்லையே!
கலப்பினமாக மாறி தனது அடையாளத்தை இழந்துகொண்டிருக்கிறான்.
மொழியைப் பேசுவதில் அப்படி என்னதான் கடினம்
வந்துவிடுகிறதோ?
மொழியைக் கண்டுபிடித்ததைவிடவா, அதை பேசுவதில் சிரமம் வந்துவிடுகிறது? வெறும் மொழிதானே
எப்படி பேசினால் என்ன? கேட்பவர்களுக்கு புரிந்தால் போதாதா? என்கிறீர்களா?
உறவுகளே! ஒன்றைப் புரிந்துகொள்ளுங்கள்! பெற்ற தாயை
"பிள்ளை பெற்றுபோடும் இயந்திரம் மட்டுமே" என்று சொல்வது எந்த அளவிற்கு
பிழையான சொல்லாடலோ, அந்த அளவிற்கு தாய்மொழியை "வெறும் தொடர்பு
ஊடகம் தானே" என்று சொல்வதும் பிழையான போக்கு!
ஆங்கிலம் மட்டும் தான் தமிழோடு கலந்து பேசப்படுகிறதா, தமிழ்ப்போலிகள் என்று எத்தனை சொற்கள் இருக்கின்றன தெரியுமா? வார்த்தை என்பதைப் பலரும் தமிழென்றே நினைத்துவருகின்றனர். வார்த்தை என்பது
வடமொழிச்சொல். தமிழில் அதற்கு "சொல்" என்று உள்ளது. வாக்கியம்
என்கிறான். அதை "சொற்றொடர்" என்றால் தவறாகிவிடுமா? சந்தோசத்தை "மகிழ்ச்சி" என்றால் சிரிக்க முடியாதா? விசயத்தைக் "காரியம்" என்றால் எதுவும் நடக்காதா? பிரார்த்தனையை "வழிபாடு" என்றால் வரம் கிடைக்காதா? கல்யாணத்தைத் "திருமணம்" என்றால் தப்பாகிவிடுமா? பரிட்சையைத் "தேர்வு" என்றால் தோற்றுப்போவீர்களா? என்னடா தமிழா?
உன் மொழி அந்நியமொழியைவிட தீட்டாகிவிட்டதா? இலாபம் ஆனாலும் நட்டமானாலும் உனக்கு அந்நிய மொழிதான் நினைவுக்கு வருமா? பலன் என்றோ,
இழப்பு என்றோ சொல்லவராத உன் நாக்கை வெட்டி
எரிந்திடவா? எல்லாவற்றையும் தெரிந்துதான் பேசுகிறாயா? "குஷ்ட நோய்" என்கிறாயே! அது உண்மையில் "குட்ட
நோய்" என்றுதானே சொல்லப்படவேண்டும்? விரல்கள்
நோய்வாய்ப்பட்டு குட்டையாக மாறிப்போவதால் அதற்கு "குட்ட நோய்" என்று
பெயர். எவனோ ஒரு கேடுகெட்ட நாய் தமிழ்ச்சொற்களோடு பிறமொழிச்சொற்களைக் கலந்து
பயன்படுத்தினான். அதை கேட்டுவிட்டு நீயும் கெட்டுப்போனாயடா தமிழா!!!
அரிசியில் கற்கள் கலந்தால் அதை பொறுக்கிப்போட்டுவிட்டு
சாப்பிடும் உன் வாய், மொழியில் மட்டும் பிறமொழிச்சொற்களைக் கலந்து
பேசுவது ஏன்? போலித்தமிழர்கள் போல, போலித்
தமிழ்ச்சொற்கள் நிறைந்து உள்ள உன் மொழியை எப்படி தூய்மை செய்யப்போகிறாய்? காலங்காலமாய் பல கழிசடைகள் செய்த பிழையை நீயும் செய்தால் உன்னை எப்படி அழைக்க? தனித்தமிழில் பேசத் தெரியாதவனைத் "தீண்டத்தகாதவனாக", "இழிபிறவியாக", "ஈனச்சாதியாக"
கருதும் நிலையை உருவாக்காமல், உயிருக்கு நிகரான
தாய்மொழியைக் காப்பது அரிது.
தஜகஸ்தான் நாட்டின் மொழி "அவார்".
அம்மொழியின் கவிஞன் இரசூல் கம்சதோவ் சொன்ன சொற்கள் இவை:
"நாளை என் தாய்மொழி சாகுமானால், இன்றே நான் இறந்து போவேன்..!!!".
அவனது தாய்மொழிப்பற்று
எவ்வளவு அடர்த்தியானது என்று பார்த்தீர்களா? அவன்
இறப்பேனென்று சொல்லத்தான் செய்தான். ஆனால் தாய்மொழி தமிழ் அழிந்துபோகக்கூடாதென்று
இந்த தமிழ் மண்ணில் "தாளமுத்து" தொடங்கி நடராசன், அரங்கநாதன் என எண்ணற்றோர் தங்களின் இன்னுயிரை ஈந்த வரலாறு உண்டு. மொழிக்காக
உலக வரலாற்றிலேயே உயிரை ஈந்த மறவர்கூட்டம் தமிழர்கூட்டம் தான். அவர்களைப்போல்
இப்போது யாரும் உயிரை விடச் சொல்லவில்லை. தமிழைத் "தமிழாக" பேசுங்கள்
என்று தான் வேண்டுகிறோம்.
தமிழன் தமிழை மதியாமல் கிடந்ததின் கேடுகெட்ட
வரலாற்றின் விளைவே இன்று வரை இந்த மண்ணில் தாய்மொழி தமிழில் நம்மால் படிக்க, வழிபட, வழக்காட, ஆட்சி செய்ய முடியாத நிலை
நீடிக்கிறது. ஆங்கிலம் பேசினால் அறிவு என்று ஏதோ ஒரு மடையன் சொல்லிவிட்டான். அதை
கேட்டு எல்லா மடையர்களும், குறிப்பாக படித்த
மடையர்கள் ஆங்கிலமும் முழுமையாகத் தெரியாமல் தமிழும் முழுமையாகத் தெரியாமல்
கலப்புமொழியொன்றைப் பேசித் திரிகின்றனர்.
உலகின் எந்த மொழி பேசினாலும் தமது சொந்த மொழி
பேசாதவனை, பேசத் தெரியாதவனை இவ்வுலகம் இழிவாகத்தான் பார்க்கும். அந்த
நிலையை இந்த மண்ணில் உருவாக்க வேண்டும். இப்படி சொல்வதால் வேறு மொழியைக் கற்க
வேண்டாமென்று பொருளில்லை. உலகின் எல்லா மொழியும் கற்றுக்கொள்ளுங்கள். அதேபோல்
உங்கள் தாய்மொழியையும் கற்றுக்கொள்ளுங்கள். ஆங்கிலம் பேசினால் ஆங்கிலத்திலேயே
பேசுங்கள். பிரெஞ்சு பேசினால் பிரெஞ்சிலேயே பேசுங்கள். செர்மனியில் பேசினால்
செர்மனியிலேயே பேசுங்கள். தமிழில் பேசினால் தமிழிலேயே பேசுங்கள். அது தான் அறிவு!
எது அறிவுடைமை என்பதைத் தெரிந்து பேசுங்கள். ஒன்றை உறுதியாக உள்ளத்தில்
வைத்துக்கொள்ளுங்கள்.
"நாக்கையே திருத்தமுடியாத நீங்கள் நாட்டை எப்படி
திருத்தப்போகிறீர்கள்?"
"ஒரு மொழியைக் கண்டுபிடித்ததைவிடவா, அதை பேசுவது கடினம்?"
நீங்கள் இப்படி பேசும்போது மற்றவர்கள் சிலநாள்கள் வேறுபட்டு பார்ப்பார்கள்.
கேலி கிண்டல் செய்வார்கள். ஆனால் அதற்காக பயந்துகொண்டு மொழிக்கலப்பை ஏற்கலாமா? அடுத்தவன் கேலி செய்வான் என்பதற்காக தாயை வணங்காமல் இருக்கமுடியுமா? உலகின் தொன்மை வாய்ந்த முதல் மொழி தமிழ். உலகின் நாகரிகமான முதல் மனிதன்
தமிழன்! ஒரு பெருமைமிக்க தாய்மொழியைப் பேசாதிருப்பது கொடுமையன்றோ!!!! ஆங்கிலம்
கலந்து பேச நீ என்ன வெள்ளைக்காரன் பிள்ளையா? வெள்ளையனுக்கு
இன்னும் நீ அடிமையாக இருக்க விரும்புவது ஏன்? இது ஒரு வரலாற்று
இழிவல்லவா? இந்த இழிவைத் துடைத்தெறியபோவது நீயாக இரு! தீயாக இரு! மொழி
தான் ஒரு இனத்தின் அடையாளம்! மொழி அழிந்தால் இனம் அழிந்துபோகும்! உனக்கு இது
வெற்று கட்டுரையாக தோன்றலாம். ஆனால் கால ஓட்டத்தில் கட்டாயம் நாம் செய்யவேண்டிய
கடமையைத்தான் இங்கே விரித்து வைத்துள்ளேன்.
முதலில் நீ உன் நாக்கைத் திருத்து! பின்பு உன்
தோழர்கள், குடும்பம், உறவுகள் என்று உன்னைச்
சுற்றி திருத்து! நானும் இதேபோல் எங்கள் குடும்பத்தையே திருத்தியுள்ளேன். இப்போது
நாங்கள் பேசிக்கொள்ளும்போது எவ்வளவு பெருமையாக உள்ளது தெரியுமா? பஸ்ஸைப் "பேருந்து" என்றும் டிக்கட்டைப் "பயணச்சீட்டு"
என்றும் படித்தவன் தான் சொல்வான். செல்போனை "அலைபேசி" என்றும், டி.வி.யைத் "தொலைக்காட்சி" என்றும் படிக்காதவன் சொல்லமாட்டான். கடைகளில்
பொருள்கள் வாங்கும்போதோ, பேருந்தில் பயணச்சீட்டு கேட்கும்போதோ என்னை
வேறுபடுத்தி பார்க்கின்றனர். எனக்கான அடையாளம் தன்னிச்சையாக அவர்கள் மனத்தில்
உருவாகிறது. இதை பெற நாங்கள் பெரிதாக எதையும் செய்யவில்லை. நான் நானாக இருக்க
முயன்றேன். தமிழன் தமிழனாக இருக்க முயல்வது தான் அவனது அடையாளம். இதுவும் ஒரு
புரட்சி தான்.
இத்தனை காலமாக செய்யாமல் விட்ட ஒரு வரலாற்றுப்
பணியை, செய்யத் துணிந்து செய்வதும் பேசத் தயங்கி இருந்த
பெருந்தடையைத் தகர்த்தெறிந்ததும் காலத்தைப் புரட்டிப்போடும் "புரட்சி"
தானே! நீயும் புரட்சி செய்ய அணியமாகு தமிழா! நீ இழந்துபோன அடையாளத்தை மீட்டெடுக்க
வா! இவ்வளவு சொல்லியும் இந்த இழிநிலை போக்க, கல்வி உனக்கு
கற்றுத்தந்த அறிவெடுத்துச் சிந்திக்க மாட்டாயோ செந்தமிழர் கூட்டமே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக