புதன், 12 ஜூன், 2013

இந்த தமிழ்ச்சாதியை என்ன சொல்லி திட்டுவது?

இந்த தமிழ்ச்சாதியை என்ன சொல்லி திட்டுவது? என்றே தெரியவில்லை! எவன் ஒருவன் என்ன செய்தாலும் இவனும் செய்துகொள்கிறான். தன்னறிவு (சுயபுத்தி என்பது வடசொல் அல்லவா?) இல்லாத காட்டுமிராண்டிகளா இந்த தமிழர்கள்? காட்டுமிராண்டிகளுக்காவது தன்னறிவு கொஞ்சமாவது இருக்கும். இவர்களுக்கோ துப்புரவாய் இல்லை! (சுத்தமாய் என்பதன் தமிழ்ச்சொல்லே, "துப்புரவு!".)இவர்கள் மூளை என்ன வெற்றுக் குப்பைத்தொட்டியா? ஏன் இந்த திட்டு? எதற்காக இந்த கோபம்? என்று நீங்கள் கேட்பது எனக்கும் கேட்கிறது. சொல்கிறேன்!!!

நாள்தோறும் அதிகாலை எழுந்ததும், எல்லோர் தமிழ் வீடுகளிலும் ஒலிக்கப்படும் பாடல் என்னவென்று உங்கள் எல்லோருக்கும் தெரிந்திருக்கும். எந்த‌ பாடல் என்று தெரிந்தது போல், அந்த பாடலின் பொருள் என்ன என்று எவருக்காவது தெரியுமா? தெரியாத, புரியாத ஒரு மொழியில் பாடப்படுகிறதே, அதன் பொருள் என்னவென்று யாராவது தெரிந்துகொள்ள முயன்றதுண்டா?(முயற்சித்ததுண்டா? என்று சொல்வது பிழை). நீங்கள் எப்படி அதெல்லாம் செய்யப்போகிறீர்கள்?

படிப்பறிவில்லாத பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளையாவது படிக்கச் செய்யவேண்டும் என்று பள்ளிக்கு அனுப்புவர். படித்த பிள்ளைகள் எதையாவது கேள்விகேட்டால், அதை தவறென்றும் அது ஒழுக்கமில்லா செயல் என்றும் கண்டிக்கும் பெற்றோருக்கு இந்த அறிவை யார் சொல்லித் தரப்போகிறார்கள்? என்னைக் கேள்வி கேட்கத்தான் உன்னைப் படிக்க அனுப்பினேனா? என்றும் படித்த திமிரில் பேசுகிறாயா? என்றும் அவர்களின் அறிவு வளர்ச்சியை மிரட்டி வதைக்கும் பெற்றோருக்கு அவர்களின் அறியாமையை யார் துடைத்தெறிவது?

இவர்கள் இப்படி என்றால், படித்தவர்கள் அதைவிடவும் மேல்.! எனக்கு தெரியாதா? நானே பலபேருக்கு சொல்லித் தருபவன். நீ என்னிடம் உன் வேலையைக் காட்டுகிறாயா? என்று படித்த அறிவாளிகள் என்ற முகத்திரையில் இருக்கும் முட்டாள்கள் பேசுவார்கள். தெரியாததைத் தெரிந்துகொள்வதும் தெரிந்ததைத் தெளிவாகத் தெரிந்துகொள்வதும் தெரியாதவர்களுக்கு சொல்லித் தருவதும்தான் அறிவு! இதற்கு புத்தகத்தைப் புரட்டவேண்டும் என்றோ, அறிஞர்களின் அடைமொழிகளை மனனம் செய்யவேண்டும் என்றோ தேவையில்லை! பட்டறிவை விட படிப்பறிவு பெரிதா? படைப்பறிவில்லாத படிப்பறிவு எதற்கு? இப்படி அறிவார்ந்த வினாக்களைத் தொடுத்து விடை காணச் செய்வதுதான் மாந்தர்களின் அடையாள அறிவு, குணம் எல்லாமே!

தமது அடையாளத்தைக் கூட கொண்டிராத ஒரு கூட்டமாக என் தமிழ்ச்சாதி இருபத்து ஒன்றாம் நூற்றாண்டு வரை வந்துவிட்டதே என்று நினைத்துப்பார்க்கையில் என் மூளைக்குள் நெருப்பெறிகிறது! "கடவுள் மறுப்பையே பகுத்தறிவு" என்று சொல்லிக்கொண்டு திரியும் அறிவாளிகளுக்கு தெரியுமா, கடவுள் மறுப்பென்பது மூடத்தனத்தை விட்டொழிக்கும் நிலையேயன்றி, அது ஒருபொழுதும் பகுத்தறிவு ஆகாது. அறிவை நோக்கி இடம்பெயராத நிலை தான், கடவுள் மறுப்பு. மூட நம்பிக்கைகளை ஒழித்தபின்னே தான் அறிவை நோக்கி இடம்பெயர வேண்டும். ஆனால் மூடப்பழக்கத்தை ஒழித்ததே அறிவின் உச்சமென்று சிலர் கொக்கரித்ததன் விளைவு, அறிவின் அடுத்த நிலை நோக்கி நகராம‌ல் இளைய பிள்ளைகள் தூங்கிப்போனார்கள்.

இப்படி தூங்கிப்போனதன் விளைவு கடவுள் மறுப்பு வரை சிந்தித்த மனித மூளை மறுபடியும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு பின்னால் போய்த்தொலைந்தது. இப்போது எவ்வளவோ படித்த பிள்ளைகள் நிறைந்து இருந்தும் இன்னும் மூடத்தனங்களும் அறியாமையும் அடைந்து கிடக்கின்றன. சரி! வீடுகளில் காலைவேளைகளில் பாடப்படும் பாடல் "கவுசல்யா சுப்ரஜா ராமா,பூர்வ சந்த்யாப்ரவசத்து..." என்று தொடங்கும். இது ஏதோ இராமனைப் புகழ்ந்து பாடப்படும் பாடல் என்றும் பக்திபரவசத்திற்காக எழுதப்பட்ட அதிகாலைப்பாடல் என்றும் நினைத்து நம் வீடுகளில் இந்த பாடலை ஒலிக்கச்செய்கின்றனர்.

பாடலின் பொருள் தெரிந்தால் எவரேனும் இதை செய்வார்களா? இதை யார் வீடுவீடாகப் போய்ச் சொல்வது? அந்தந்த வீடுகளிலுள்ள படித்த இளைய பிள்ளைகள் தானே சொல்லவேண்டியவர்கள். இது அவர்களின் கடமையும்கூட. இதோ எல்லா தமிழ்வீடுகளுக்குமான பிள்ளையாக நான் என்னைக் கருதிக்கொள்கிறேன். அதனால் இந்த பாடலின் பொருளை, இங்கு பகிருகிறேன்...

பொருள்:

கவுசல்யா பெற்ற இராமா! எழுந்திரு! ஆரண்யத்தில் அரக்கர்கள் (தமிழர்கள்) அட்டகாசம் தாங்க முடியவில்லை.

நீ உடனே எழுந்து வந்து அந்த அரக்கர்களை (தமிழர்களை) எல்லாம் அழித்து ஒழிக்கவேண்டும்.

இதுதான் சுப்ரபாதப் புனிதப் (?) பாடலின் பொருள். தமிழர்களை அழிக்க இராமனை எழுப்புவதற்கு தமிழர்களே பாடல் ஒலித்து அழைப்பது மடமையன்றோ? இராமன் என்பவன் கிடையவே கிடையாது என்பது நமக்கு தெரியும். ஆனால் நம்மை அழிக்க அவனை அழைப்பதுபோல் இருக்கும் பாடலை நாமே ஒலிக்கச் செய்து கேட்டால் என்ன பொருள்? தமிழ்த்தாய்மார்கள் தங்கள் பிள்ளைகளை அழிக்க அல்லவோ இராமனைக் கூப்பிடுகின்றனர்! இந்த மடச்செயலை யார் அவர்களுக்கு சொல்லிக் கொடுப்பது? இப்படித்தான் உறவுகளே, தமிழர்கள் என்ன, எதுவென்றே தெரியாமல் சமக்கிருதத்தில் சொல்லப்படும் மந்திரங்களை புனிதமாகக் கருதிவருகின்றனர். இந்த மடமைதன்னைக் கொளுத்த, எவர் எரிதழல் ஏந்திப்போவது? இளைய பிள்ளைகளிடத்தே சொல்லி வையுங்கள்! அவர்கள் எல்லா முட்டாள்தனத்திற்கும் கொள்ளி வைப்பார்கள்...!!!

1 கருத்து: