வெள்ளி, 14 ஜூன், 2013

என் தாய்மொழியின் சேய்மொழி!



                                                 "மெய்ப்பொருள் காண்பதறிவு" என்று வலைப்பதிவை உருவாக்கிவிட்டு அதில் எனக்கு பிடித்த கவிதையைப் பற்றி எழுதலாமா? என்று நான் சிந்திப்பதுண்டா? ஏன்? கவிதை என்றால் பொய்களின் வரிகள் என்று இலக்கியவாதிகள் விமர்சிப்பதுண்டு. கற்பனையோடு கலந்து எழுதுவதை எப்படி மெய்ப்பொருளில் சேர்ப்பதென்ற ஐயம் எனக்கும் இருந்தது. ஐயத்தை போக்குவதற்கு கவிதையையும் ஒரு பொருளாக வைத்து மெய்யுணர்வோம் என்ற வேகத்தில் என் தனிமையை இனிமையாய் மொழிபெயர்த்தேன்!

                                                      கவிதை, ஒருவொரு மொழிக்கும் பிறக்கின்ற குழந்தை! கவிதைகள் இல்லாத மொழி பரிதாபத்திற்குரியது. கவிதை என்றதும் நம் நினைவுக்கு வருவன கற்பனை, உவமை, குறியீடு ஆகியவை. இவைகள் இல்லாமலும் கவிதையை எழுத முடியும். கவிதை என்பது கருத்தைச் சுருங்கச் சொல்வதே அன்றி வேறில்லை. "சொலவடை" என்று சிற்றூர்களில் சொல்லும் பழக்கமுண்டு. அது சொலவடையா, சொல்லடையா என்பது ஆய்வுக்குரியது. பழமொழிகள் கவிதையின்பாற்பட்டதே! சுருங்கச் சொல்லும் போது மொழிக்கு மொழி கவிதையின் வடிவம் மாறும். சப்பானின் கைக்கூ கவிதைகளை இன்றைய தலைமுறையினர் போற்றி புகழ்வது நலம் தான். ஆனால், அந்த கைக்கூ கவிதையின் வடிவம் நம் தாய்மொழி தமிழில் இருந்து சென்றது என்பது எத்தனை பேருக்குத் தெரியும். பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றான "பழமொழி நானூறு" சங்க காலத்தில் இயற்றப்பட்ட கைக்கூ கவிதைகளின் தாய் என்பதில் எந்தவித ஐயமும் இல்லையே!

                                                 சுருங்கச் சொல்லும் வரிகளை அழகுபடுத்தவே கற்பனை பயன்படுகிறது. கற்பனை கலந்த‌ உவமையோடு கவிதையை வாசிக்கும்பொழுது நம் உள்ளம் சிலிர்க்கிறது. கவிதையை விரும்பும் அளவும் அதிகரிக்கிறது. மானிட மூளையின் சிறப்பானதொரு செயலாக கற்பனையை நாம் கருதலாம். கற்பனைதான் அறிவியலின் அடிப்படை. மெல்லிய இழைகள் சூடுபட்டால் ஒலி உண்டாகும். அதன் மூலம் மின்விளக்கு உருவாக்கலாம் என்ற கற்பனைதான் அந்த கண்டுபிடிப்பின் அடிப்படை. அறிவியல் அறிஞர்களின் கற்பனைகளே அவர்களின் கண்டுபிடிப்புகளை நோக்கி சிந்திக்கவைக்கிறது. கற்பனையை வெற்றுப் பொய்களின் கலவை என்று குறுக்கிக்கொள்ளக்கூடாது. அதை சிந்தனையின் சிறுபொறி என்று சொல்லலாம். கற்பனைதான் உவமைகளைத் தேர்ந்தெடுக்கிறது. உவமைகளை உருவாக்க முடியாது. உலகின் ஒருவொரு அசைவும் உவமைகளே! சூரியன் தொட்டு சிறு மணற்துகள் வரை அத்தனையும் கவிதைக்கான பாடுபொருள்களே!

                                                           பழங்காலத்தில் கவிதை என்பது செய்யுள் என்ற இலக்கண மரபிற்குள் மட்டுமே இருந்துவந்தது. அப்போது இலக்கியம், இலக்கணத்தை மீறாமல் இருந்தது. இப்போது கவிதையிலக்கியம் தனக்கான இலக்கணத்தை எழுதிக்கொண்டது. அந்த புதிய இலக்கணம் கவிதையை இலகுவாக்கியது. உரைநடையின் உடைந்த வடிவமே கவிதை என்று பலர் கருதிக்கொண்டுள்ளனர். எதார்த்த கவிதைகள் அப்படித்தான் இருக்கும். உவமைகளும் குறியீடுகளும் அந்த தோற்றத்தை உடைக்கக் கூடும். மொழியின் மழலை வடிவமாகவே நான் கவிதையைக் கணக்கிடுவதுண்டு. எம் தாய்மொழி தமிழ் உண்மையில் ஓர் கவிதைமொழி! எதுகைகளும் மோனைகளும் நிறைந்து கிடக்கும் மொழி! இலக்கணத்தில் அழகுக்காக அணியிலக்கணம் என்ற ஓர் தனிப்பிரிவையே கொண்டுள்ள மொழி! இயைபுத்தொடை, முரண் தொடை என்று கவிதைக்காக தனது வெளியை விரித்துக்கொண்டுள்ள மொழி! பெருமைகொண்ட என் தாய்மொழியில் புதுக்கவிதை ஒரு புதுப்பரிணாமத்தைத் தந்தது. ஆனால் வேற்றுமொழிச்சொற்கள் கலந்ததை கவிதையாகக் கூட ஏற்கமுடியாது. அதில் புதுக்கவிதை என்ற பெருமை வேறு.

                                                       உள்ளத்தில் உணர்வுகளை அழகாக, அளவாக, இலகாக சொல்லமுடிந்த அலகு தான் "கவிதை". கவிதை எப்போதும் ஒரு பதிவுக்களமாகவே இருக்கின்றது. காலத்தின் பதிவுகளை, கவிதை அழகாக எடுத்துச்செல்லும். ஒருவொரு புரட்சியிலும் விடுதலைப்போரிலும் மக்களின் ஒருங்கிணைப்பிலும் காதலின் பகிர்விலும் கண்ணீரின் நறுமணத்திலும் காயத்தின் வலியிலும் கவிதை தனக்கான இடத்தை சிறப்பாக நிரப்பிக்கொள்ளும். கவிதையைத் தாங்கும் காகிதங்கள் பெருமைகொண்டவை. கவிஞர்களின் காதலிகள் போற்றப்படவேண்டியவர்கள், கொடுத்துவைத்தவர்கள். கவிதை காதலை, கண்ணீரை, காயத்தை, சிரிப்பை, இழப்பை, உவகையை, தோல்வியை, வெற்றியை, வீரத்தை, இயற்கையை, இயலாமையை, இரவின் உறவை, உறவின் இன்பத்தை, பார்வையின் பரிமாணத்தை இப்படி வாழ்வின் எல்லா உணர்வுகளையும் பதிவுசெய்துகொள்ளும்.

                                                  நான் ஒரு கவிதைக்காக சிந்தித்துக் கொண்டிருக்கும்போது கற்பனையின் அடியாழம் வரை போய் வருவேன். சிந்தையில் வரும் சொற்களைத் தேர்ந்தெடுத்து மட்டுமே பயன்படுத்துவேன். பல சொற்கள் என்னால் புறக்கணிக்கப்படும். எதையும் வேறுவொரு கோணத்தில் பார்க்கும் பழக்கத்தை கவிதை எனக்கு சொல்லித்தந்தது. கவிஞர்கள் செருப்பின்றி நடந்தாலும் செருக்கின்றி நடப்பது அரிது என்று கருத்து கொண்டவன். கவிதை உண்மையில் எனக்கு புது செருக்கைத் தந்தது. செருக்கின் முறுக்கில் என் தூவல் துவக்கைபோல் தான் எனக்கு தெரியும். எல்லா மொழியின் கவிஞர்களையும் நான் நேசிக்கிறேன். அவர்கள் தொழிலில் என்னவர்கள் என்றே தோன்றும். சுப்பிரமணியப் பாரதியும் கனக சுப்புரத்தினமும் எலியட் நெருடாவும் பைரனும் கார்க்கியும் புதுவை ரத்தினதுரையும் காசி ஆனந்தனும் என் மூத்தவர்கள் என்று தான் என் உள்ளம் நினைக்கின்றது. நான் மேற்சொன்ன கவிஞர்கள் எவரும் தங்கள் பணத்திற்காக எழுதியவர்கள் இல்லை, தங்கள் இனத்திற்காக எழுதியவர்கள். நாட்டு மக்கள் வறுமையில் கிடந்து சாகும்போது என்னாலும் சொர்க்கத்தைப் பற்றி கற்பனை செய்துகொண்டு இருக்கமுடியாது. வாழ்வுக்கும் கவிதைக்கும் இடைவெளி இல்லாத நேர்மை சிறப்புக்குரியது.

                                                       அறிவை முதன்முதலில் கவிதையில் சொன்னவன் நம் பாட்டன் வள்ளுவன் தான். நாம் படித்து படித்து வியந்துபோகும் கவிஞன் வள்ளுவன் தான். கற்பனை, உவமை எல்லாம் கலந்து இலக்கணத்தோடு இயைந்து எழுதிய கவிஞன். காமத்துப்பால் அதிகாரத்தில் எத்துணை அழகான காதல் கவிதைகள்! மதிப்பெண்ணுக்காக மட்டுமே திருக்குறளைப் படித்தவர்கள்தான் இங்கு அதிகம். அப்படி இல்லாமல் கவிதையாய் நினைத்துப் படித்துப் பாருங்கள். உங்கள் விரல்களும் கவிதை எழுத தொடங்கும்.
கவிதை எழுதி முடிக்கும்போது நான் பிள்ளைபெறுவதின் வலியை உணர்வேன். உள்ளமும் உடலும் சோர்ந்துபோகும். என் கவிதை எனக்கு குழந்தை. நான் அதன் ஆண் தாய்! மொத்தத்தில் கவிதைகள் தாய்மொழியின் சேய்மொழியே!

1 கருத்து: