வியாழன், 20 ஜூன், 2013

பிழை திருத்தல் ஓர் கலையாகும்!


                           "மெய்ப்பொருள் காண்பதறிவு" என்று தலைப்பிட்டுவிட்டு தமிழ்,தமிழர் பற்றிய தகவல்களை மட்டும் அதிகமாக வெளியிடுவது பற்றி உங்களுக்கு ஐயம் தோன்றலாம். முதலில் எமது தாய்மொழியில் உள்ள புரிதல்பிழையைக் களைவது எமது கடமை. இலக்கணம் வகுத்துள்ள முறைப்படி மொழியைச் சொல்லிக்கொடுப்பதும் இல்லை, பேசுவதும் எழுதுவதும் இல்லை. இதை சரிசெய்யாமல் வேறு எதை சரிசெய்யப்போவது? தமது தாய்மொழியைத் தவறாக பேசுவதை எவரும் குற்றமாகக் கருதுவது இல்லை. முந்தைய தலைமுறை செய்த பிழையை, அடுத்த தலைமுறைக்கு இடம்பெயர்க்காமல் சரியான வழியையும் சரியான மொழியையும் தருவது ஒருவொருவரின் தலையாயக் கடமை!

                   "எத்தனை"க்கும் "எத்துணை"க்கும் வேறுபாடுண்டு! எத்தனை என்பதை "எத்தனை நாள்கள்?" என்றும், எத்துணை என்பதை "எத்துணை கவலை?" என்றும் பயன்படுத்துவதிலிருந்து நாம் வேறுபாட்டைக் கண்டுணரலாம்! எத்தனை என்பது எண்ணிக்கையையும் எத்துணை என்பது எவ்வளவு என்ற அளவையும் குறிக்கும். "என்ன அழகு! எத்தனை அழகு?" என்ற பாடல்வரிகள் பிழையோடு எழுதப்பட்டுள்ளதை நாம் இப்போது உணரலாம் அல்லவா!

                    சோறு என்று சொல்வதை எல்லோரும் "சாதம்" என்று சொல்கின்றனர். உணவகங்களில் "லெமன் சாதம் ரெடி" என்று எழுதிவைப்பவனைப் பிடித்து அடிக்க, எழுதிய கையை ஒடிக்க இந்த மண்ணில் மானமுள்ள தமிழர் கூட்டம் இல்லாமல் போனது காலத்தின் கொடுமையன்றி வேறென்ன? "லெமன்" என்ற ஆங்கிலச் சொல்லும் "சாதம்" என்ற வடமொழிச் சொல்லும் "ரெடி" என்ற ஆங்கிலச் சொல்லும் தான் தமிழனின் பல்லுக்கு பல்லக்கு தூக்கும்போல..!?

                   சோறு தின்பதா? உண்பதா? என்ற கேள்வியை நாம் நமக்குள்ளே என்றாவது எழுப்பியதுண்டா? எழுப்பி தமிழாசியர்களிடம் கேட்டதுண்டா? நீங்கள் கேட்டாலும் கேட்டிருந்தாலும், அவர்கள் உங்களுக்கு 'எது பதில்?' என்று தான் சொல்லித்தருவரேயொழிய 'ஏன் இது பதில்?', 'இது பதிலில்லை' என்று சொல்ல அவர்களுக்கு தெரிவதில்லை. தமிழிலக்கணம் ஒரு செம்மையான மொழியிலக்கணம் என்பதை இவற்றிலிருந்து நாம் காணலாம். ஒருவொரு முறைக்கும் ஒருவொரு சொல்லை வைத்து உருவான மொழி! இதோ அதற்கான சான்று:

அருந்துதல்-  மிகச்சிறிய அளவில் உட்கொள்ளுதல்(மருந்து அருந்துதல்).

உண்ணல்- பசி தீர உட்கொள்ளல்(சோறு உண்ணல்).

உறிஞ்சுதல்-வாயைக் குவித்து நீரியற் பண்டங்களை இழுத்துக் கொள்ளுதல்.

குடித்தல் - சிறிது சிறிதாக பசி தீர உட்கொள்ளல். (ஆக, "மது அருந்தினான்" என்பதே சரியானது! ஆனால் இப்போதெல்லாம் யாரும் மதுவை அருந்துவதில்லை. குடிக்கவே செய்கின்றனர். அவர்கள் அருந்தும் அளவு அந்தளவிற்கு உள்ளது).

தின்னல் -   சுவைக்காக ஓரளவு தின்னுதல்(நொறுக்குத்தீனிகள்)

                      இப்படி ஒருவொரு சொற்களும் வேறுபட்டு இருப்பதை யாரும் சொல்லித்தராது பிழையன்றோ? கம்பராமாயணம் என்ற கழிசடைக் கதையைச் சொல்லிக்கொடுப்பதைவிட நாள்தோறும் பேசும் சொற்களைப் பாடப்பகுதியில் வைக்காதது கயமைத்தனமாகத்தான் நான் கருதுவேன். ஏனென்றால் எனது பாடத்திட்டத்தை வகுப்பவன் நானல்லன். என் தாய்மொழிக்குரியவனாக இருந்தாலும் உணர்வுள்ள தமிழனாக இருப்பது ஐயம் தான். இதையெல்லாம் மாற்றவேண்டிய தேவையுள்ளது. மாற்றுவோம்!

                      "எனது குடும்பம், எனது அப்பா" இவற்றில் எது பிழையானது என்று கேட்டால், தெரியப்போவதில்லை! ஏனென்றால் தெரிந்துகொள்வதில் விருப்பமில்லை. சிறுவயதில் இருந்து தமிழ்மொழிப்பற்றோடு வளர்ந்த பிள்ளை நான். நானே இவற்றையெல்லாம் அறிந்துகொள்வதற்கு இத்துணை காலம் கடக்கவேண்டியிருந்தது. 'எனது அப்பா' என்ற சொற்றொடர் தவறானது. எப்படியென்றால், எனது=என்+அது என்று பிரியும். அப்பா என்ற சொல் உயர்திணையைக் குறிக்கும். உயர்திணையை 'அது' என்று சுட்டக்கூடாது. குடும்பம் என்பது சிலரைக் கொண்ட அமைப்பாக இருந்தாலும் குடும்பம் என்பதை 'அது' என்ற சொல்லால் சுட்டுவது பிழையன்று. எமது தலைவர் என்பது பிழை. எம் தலைவர் என்பதே சரி! எம் தேசம் என்பது பிழை. எமது தேசம் என்பதே சரி!

                       சொல்வதைத் தெளிந்து சொல்வோம்! செய்வதைத் துணிந்து செய்வோம்! சொல்வதிலும் சில வேறுபாடுகளை நம் இலக்கணம் கொண்டிருக்கிறது. நிறைய சொற்களை நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் அவற்றின் பொருளுணர்ந்து நாம் பயன்படுத்தியது இல்லை. "மெய்ப்பொருள் காண்பதுதானே அறிவு!". காண்போம்!!! கண்டபின் பொருளுணர்ந்து சொல்லிப் பழகுவோம்!

சொல்லுதல் - சுருக்கமாகச் சொல்லுதல்.

பேசுதல்  -  நெடுநேரம் உரையாடுதல்.

கூறுதல் -  கூர்படுத்திச் சொல்லுதல்.

சாற்றுதல் - பலரறியச் சொல்லுதல்.

கொஞ்சுதல் -  செல்லமாகச் சொல்லுதல்.

பிதற்றுதல் - பித்தனைப் போல சொல்லுதல்.

ஓதுதல்   - காதில் மெல்லச் சொல்லுதல்.

செப்புதல் -  விடை சொல்லுதல்.

மொழிதல் - திருத்தமாகச் சொல்லுதல்.

இயம்புதல்  -  இனிமையாகச் சொல்லுதல்.

வற்புறுத்தல்  -   அழுத்தமாகச் சொல்லுதல்.

                           அடடா! இதை வாசிக்கும்போதே எத்துணை இன்பம் என்னுள்ளே விழைகிறது தெரியுமா? இப்படிப்பட்ட மொழியை "நீச பாசை" என்றவனைத் தூக்கில் போடாமல் விட்டதே எனது தமிழ்ச்சாதி! அதுவன்றோ பெரும்பிழை! இப்போது மானத்தமிழர் படையொன்று உருவாகிக்கொண்டிருக்கிறது! அந்த படைவீரர்கள் தமிழில் மட்டுமே பேசவேண்டும் என்று சூளுரைத்து களத்தில் நிற்பர். கருஞ்சட்டை, புலிக்கொடி, விரல்கள் குவித்தொரு வீர வணக்கம் என்று சீரான போக்கில் வளர்வர். இனி சொல்லிப்பாருங்களடா! தமிழைத் தரந்தாழ்த்தி... தூக்கு ஆயத்தமாகும் முன், நாக்கு துண்டிக்கப்படும்!!!

                           "அதுவல்ல, அதுவன்று" இவற்றில் எது சரி? அல்ல, அன்று இவைகளை எந்தெந்த இடங்களில் பயன்படுத்தவேண்டும்? எதற்காக இப்படி வேறுபடுத்திப் பயன்படுத்த வேண்டும்? எந்த விடை என்று சொல்லித்தரும் பாடநூல்கள், எப்படி இந்த விடை சரியானது என்று சொல்லித் தர முயல்வதில்லை! அன்று, அல்ல, அல்லன், அல்லள், அல்லர் என்றிருக்கும் மறுப்புக்கான சொற்களெல்லாம்  எவ்விடங்களில் பயன்படுத்தப்படவேண்டும் என்பது மொழியறிவின் கூறுகள்.

அன்று= ஒருமைப்பொருளுக்கு;
அல்ல=பன்மைப்பொருளுக்கு;
அல்லன்=ஆண்பாலுக்கு;
அல்லள்=பெண்பாலுக்கு;
அல்லர்=பலர்பாலுக்கு;


                             நாம் ஒருமைக்கும் பன்மைக்கும் 'அல்ல' என்ற சொல்லையே பயன்படுத்துகிறோம். அவனல்ல, அவளல்ல, அதுவல்ல, இதுவல்ல என்று பிழையோடுதான் எழுதுகிறோம், பிழையோடுதான் பேசுகிறோம். செய்தித்தாள்களில்தான் அதிகமான பிழைகள் உள்ளன. நமது தாய்மொழியை பிழையோடு எழுதி பிழைப்பவனை நீங்கள் ஒதுக்கிவைப்பதே இல்லை! எழுத்துக்கூட்டி வாசிப்பவனிலிருந்து ஏடு எடுத்து படித்தவன் வரைக்கும் வாசிக்கிற ஊடகமாக செய்தித்தாள் இருக்கின்றது. அதிலேயே பிழையோடு தாய்மொழி பரவினால் அது கவனத்தில்கொள்ளவேண்டிய ஒன்றாகவே உள்ளது. மொழிக்கலப்பு, எழுத்துப்பிழை, சொற்றொடர்பிழை என்று எல்லா பக்கங்களிலும் துக்கப்பட்டு மொழி சாகிறது.

                            "பேருந்து தண்டவாளத்தைக் கடக்கும்போது ஏற்பட்ட பழுதால் நடுவில் நிற்க, அப்போது வந்த தொடர்வண்டியால் மோதி வெகுதூரம் இழுத்துச் செல்லப்பட்டது"
இது செய்தி! இது சரியான சொற்றொடரா? என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். 'தொடர்வண்டியால் மோதி' என்பது சரியாக இருக்குமா? 'தொடர்வண்டியால் மோதப்பட்டு' என்பது சரியாக இருக்குமா?. சரி! இன்னொன்றையும் பார்ப்போம். 'வெகுதூரம் இழுத்துச்செல்லப்பட்டது' சரியாக இருக்குமா? 'தள்ளிச் செல்லப்பட்டது' சரியாக இருக்குமா? முன்னோக்கி இயக்கும் வினைக்கு "தள்ளு" என்பதும் பின்னோக்கி இயக்கும் வினைக்கு "இழு" என்பதும் தான் சரியாக இருக்கும். ஆனால் அந்த செய்தி, பிழையோடு சொற்றொடர் அமைத்து வெளிவந்துள்ளது. இப்படி எழுதுபவர்களைத்தான் "ஊடகப்புலி" என்றும் "கட்டுரை சிங்கம்" என்றும் "தலையங்க சிறுத்தை" என்றும் புகழ்கின்றனர். கொடுமை! கொடுமை!

                             புத்தாண்டு எதுவென்றே தெரியாத தமிழன் பண்டிகைக்கும் விழாவுக்குமான வேறுபாட்டைக் கூட அறிந்துகொள்ளாமல் இருக்கின்றான். பண்டிகை என்பது வீட்டிற்குள் கொண்டாடுவது, விழா என்பது வெளியிடங்களில் கொண்டாடுவது. கொண்டாடுவதைக் கூட குறை(பிழை)யோடு தான் கொண்டாடுவதா? இவை மட்டுமா, இன்னும் எத்தனை எத்தனை பிழைகள்...!!!

                              தமிழில் ந,,ன என்று ஒரே உச்சரிப்பொத்த எழுத்துகள் உள்ளன.அவைகளின் வேறுபாடறிந்து பொருளுணர்ந்ததுண்டா? முன்னூறுக்கும் முந்நூறுக்கும் வேறுபாடு தெரியுமா? எண்ணூறுக்கும் என்னூறுக்கும் எந்நூறுக்கும் வேறுபாடு தெரியுமா? முன்னூறு என்பது முன்னே வரும் நூறு என்றும் முந்நூறு என்பது மூன்று நூறு என்றும் வேறுபடும். எண்ணூறு என்பது எட்டு நூறு என்றும் என்னூறு என்பது என்னுடைய நூறு என்றும் எந்நூறு என்பது எந்த நூறு? என்றும் வேறுபடும். 'தின்' என்றால் உண்பதையும் 'திண்' என்றால் வலிமையையும் குறிக்கும். 'ஊன்' என்றால் இறைச்சியையும் 'ஊண்' என்றால் உணவையும் குறிக்கும். அக்கரைக்கும் அக்கறைக்கும் வேறுபாடு தெரிவது தேவையான ஒன்று. அந்த கரை தான் அக்கரை. கவனம் என்பது தான் அக்கறை. இதை அந்த கறை என்றும் பிரித்துப் பார்த்து பொருளுணரலாம்.

                              கணியன் பூங்குன்றனார் பாடிய புறநானூற்றுப் பாடலில் வரும் வரி தான் "யாதும் ஊரே யாவரும் கேளிர்". இதில் "கேளிர்" என்பதற்கு என்ன பொருள்? "கேளுங்கள்" என்றா பொருள்? "கேளிர்" என்பதற்கு உறவினர் என்றே பொருள். ஆனால் நாம் கேளுங்கள் என்று பொருள்படும்படி யாதும் ஊரே யாவரும் "கேளீர்" என்று எழுதிவருவது வியப்பிற்குரியது. இதையெல்லாம் நினைக்கையில் உள்ளுக்குள் குருதி கொதிக்கிறது.
                           
                              "ஆகிய, முதலிய" எப்படி பயன்படுத்துவது? வரையறை தெரிந்து எண்ணி முடிக்கத்தக்கவற்றுக்கே "ஆகிய" சேர்க்க வேண்டும். அ இ உ எ ஒ "ஆகிய" ஐந்தும் குற்றெழுத்துகள் எனலாம். திருவில்லிபுத்தூர், விருதுநகர், சாத்தூர் முதலிய நகரங்கள் சிவகாசிக்கு அருகே உள்ளன எனலாம்.
                              
                              சுவரில், சுவற்றில் எது சரி? "Post"ல் ஒட்டுவதால் "Poster" ஆனது. இங்கே சுவரில் ஒட்டுவதால் சுவரொட்டி ஆனது. ஆனால் சில இடங்களில் 'சுவற்றில்' ஒட்டாதீர் என்று எழுதுவதைக் காண்கிறோம். இது தவறு! சுவறு - வற்று, காய்ந்து போ என்று பொருள். ஆகவே, "சுவரில் ஒட்டாதீர்" என்று எழுத வேண்டும்.இதுவே சரி! அலைகடல் என்பதற்கும் அலைக்கடல் என்பதற்கும் வேறுபாடு உள்ளதாம். "அலைகடல்" என்றால் அலைகின்ற கடலையும் "அலைக்கடல்" என்றால் அலையை உடைய கடல் என்றும் பொருள்படும்.

                              "மன்னிக்கவும்" என்ற சொல் தமிழ்ச்சொல் இல்லை. "பொறுக்கவும்", பொறுத்தருளவும்" என்பவையே சரியானவை ஆகும். 'ரத்தம்' என்பது வடமொழிச்சொல் என்றும் அதனை தமிழ்ப்படுத்தி எழுதுவதாக நினைத்து நாம் 'இரத்தம்' என்று எழுதுவோம். இது சரியா? இல்லை! அரத்தம் என்பதே சரியான தமிழ்ச்சொல். காலப்போக்கில் அது ரத்தம் என்று மட்டும் சொல்லப்பட்டு வந்தது. எழுதியும் சிலர் தொலைத்தனர். அதுதான் பிழையான வரலாறு. அரக்கு, அரத்தினம் என்பவை செந்நிறமுள்ள பொருள்களாகம். அர்+அக்கு=அரக்கு. செந்நிறமுள்ள அக்கு தான் அரக்கு என்று அழைக்கப்படுகிறது. அதேபோல், அரத்தம் என்று பண்டைய செய்யுள்களில் நான் வாசித்த நினைவிருக்கிறது. அரங்க சாமி என்ற பெயர் ரங்கசாமி ஆகி, ரெங்கசாமி ஆனதுபோல், அரத்தம் என்பது ரத்தம் ஆகி இரத்தம் என்று சொல்லப்படுகிறது.  இப்படி ஒருவொரு சொல்லாக நாம் களைந்தெறியவேண்டியுள்ளது.

                             தமிழன் தன் தாய்மொழியைப் புகழ்ந்தான். போற்றினான். தலையில் வைத்துக் குதித்தான். ஆனால் காப்பாற்றவில்லை. சொந்த மொழி அழியப்போகிறதே என்னும் கவலை கொஞ்சமும் இன்றி வந்த மொழிக்கெல்லாம் தமிழன் வாசல் திறந்தான். தமிழ்மொழி தனித்தியங்கும் ஆற்றலுடையது என்பது தெரிந்தும் தமிழன் பிறமொழிகளை ஏற்றுத் தமிழை அழித்தான். இதோ அதற்கு ஒரு சரியான சான்று.

                             "வீட்டுக்கதவை கள்ளச் சாவியால் திறந்து பீரோவில் இருந்த துட்டையும் கோணிப்பையில் இருந்த பப்பாளிப் பழத்தையும் சப்போட்டாப் பழத்தையும் கொய்யாப் பழத்தையும் திருடிய சுமார் இருபது வயதுடைய கில்லாடி ஆட்டோ ரிக்‍‍‍‍ஷாவில் தப்பி ஓடியபோது தகவல் அறிந்த போலீஸ் ஏட்டு விரட்டி துப்பாக்கியால் சுட்டதில் தோட்டாக்கள் அவனைத் தீர்த்துக் கட்டின"............ ஒரு செய்தி ஏட்டில் திருட்டு நிகழ்வைப் படித்து முடித்து, அது செந்தமிழ்தான் என நினைக்கிறோம். ஆனால், தமிழா இது?

                             'சாவி'= போர்த்துக்கீசியம்; 'பீரோ'=பிரெஞ்சு; 'துட்டு'= டச்சு; 'கோணி'=இந்தி; 'பப்பாளி'=‍ மலாய்; 'சப்போட்டா'= இசுப்பானியம்; 'கொய்யா'= பிரேசிலியன்; 'சுமார்'= பெர்சியன்; 'வயது'= சமற்கிருதம்; 'கில்லாடி'= மராத்தி; 'ஆட்டோ'=கிரேக்கம்; 'ரிக்சா'=சப்பானியம்; 'தகவல்'=அரபி; 'போலிஸ்'=இலத்தின்; 'ஏட்டு'=ஆங்கிலம்; 'துப்பாக்கி'= துருக்கி; 'தோட்டா'= உருது. எந்த மொழியையும் தமிழன் ஏற்றுக்கொள்வான் என்பதற்கு இதைவிடச் சான்று தேவையில்லை. பெரும்பிழைகள் நம் தாய்மொழியை வலைபோல் சிக்கியுள்ளது. அதை அறுத்தெறியவேண்டும். பிழைகளையெல்லாம் திருத்தவேண்டும்.

                             யார் செய்வது? நான் மட்டுமா? நீ? நீங்கள்? நாம் தான் சேர்ந்து செய்யவேண்டும். உணர்வுள்ள தமிழ்ப்பிள்ளைகளை  நாம் உருவாக்க வேண்டும். அவர்களுக்கு பிழையற்ற தாய்மொழியைக் கற்றுத்தர வேண்டும். அதற்கு நாம் பிழைகளைத் திருத்தவேண்டும்.


                                                                "பிழை திருத்தல் ஓர் கலையாகும்!
                          பிழை திருத்த தவறினால்
                          பிழையே பின் நிலையாகும்!
                          பிழையது நிலையானால்
                          பிழைக்காமல் மொழியழிந்து
                          பிழையாலே கொலையாகும்!!!"

இது எனது கவிதைகளில் ஒன்று! பிழை திருத்துவது ஒரு கலைதான் உறவுகளே! பிழை திருத்துங்கள்! பிழை திருத்தி கலை பொருத்துங்கள்! மெய்ப்பொருள் காண்பதறிவு!!!

3 கருத்துகள்:

  1. நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் தம்பி!
    அன்றாடம் சமுகவலைத்தளங்களில், தமிழ்க்கொலைகளையே பார்த்துப்பார்த்து, புண்ணாகிப்போன மனதுக்கு ஒத்தடம் கொடுத்தது போலுள்ளது உங்கள் எழுத்துகளும் கருத்துகளும்!
    வாழ்க உங்கள் தமிழார்வம்!

    பதிலளிநீக்கு